சென்னை:மணலி புதுநகரில் கடந்த 12ஆம் தேதி வீடு ஒன்றில் சிலர் சண்டையிடுவதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்தவர்கள் கள்ள நோட்டுக்களை அச்சடிக்கும் கும்பல் எனத் தெரியவந்தது.
உடனடியாக அங்கிருந்த ரூ.16 லட்சம் அளவில் ரூ.200 கள்ள நோட்டுகள், 3 கலர் பிரிண்டர்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அங்கிருந்த யுவராஜ், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன்(33), பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இம்தியாஸ்( 24), திருவொற்றியூர் தாங்கலை சேர்ந்த ஜான் ஜோசப்(31), வியாசர்பாடியைச் சேர்ந்த ரசூல்கான்(38), செங்குன்றத்தைச் சேர்ந்த முபாரக்(46) ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் யுவராஜ், இம்தியாஸ், ரசூல்கான் ஆகிய 3 பேர் முக்கிய குற்றவாளிகள் என்பதால் அவர்களை 2 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.