மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி நடப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 34 பேர் தமிழ்நாடு பட்டியலில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மோசடியாக குடியிருப்புச் சான்றிதழ் பெற்று இடம்பெற்றிருக்கிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது. அவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த 34 மாணவர்களையும் இனி மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கமுடியாதபடி கேட்டுக்கொள்கிறோம்.
நீட் தேர்வுக்கு விலக்களிக்க முடியாது என மறுத்துவரும் பாஜக அரசு ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களித்து 'இனிசெட்' என்று தனியே அவற்றுக்கு நுழைத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது தமிழ்நாட்டு அரசுக்கு பாஜக அரசு செய்யும் பச்சைத் துரோகமாகும்.
பாஜக அரசின் துரோகம் போதாதென்று இப்போது வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாட்டின் தரவரிசைப் பட்டியலில் தெலங்கானா தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 34 பேர் இடம்பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.