சென்னை: தேசிய அளவிலான சுத்தமான காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தென் மாநிலங்களுக்கான ஆய்வுடன் கூடிய கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது.
இதில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபி, தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் கால நிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன் துறை சார்ந்த மூத்த உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் மேடையில் பேசிய மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், "திருக்குறள் புத்தகத்தினை கொடுத்த அமைச்சர் மெய்யநாதனுக்கு நன்றி. திருக்குறள் வாழ்வியலுக்கான புத்தகம். இன்று நாளை மற்றும் இல்லாமல் இதனை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே நமது குறிக்கோளை அடைய முடியும். மேலும் காற்றின் தரத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்" எனக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், "இந்தியா முழுவதும் 132 நகரங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் காற்றின் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 14 வகையான பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது. கரோனா காலத்தில் அதனை நடைமுறை படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
ஆனால் தற்போது பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் ஆலைகளை கண்டறிந்து மூடப்பட்டுவருகிறது. இதுவரை 174 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் எதில் கலந்தாலும் மாசு ஏற்படுகிறது. நிலம், கடல் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. பல உயிரினங்கள் அதனை தெரியாமல் உட்கொண்டு உயிரிழந்து விடுகின்றன.
இதற்கு மாற்றாக தான் அரசு மீண்டும் மஞ்சப்பை என்ற புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. 20% மீண்டும் மஞ்சப்பை இயக்கம் மூலம் வெற்றி பெற்றுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றிற்கு அபராதம் விதித்து வருகிறோம்.
அதனை அதிக்கப்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,121 டன் பிளாஸ்டிக் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு 12 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்கள் கடைகள் போல், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் தனி நபர்களுக்கும் அபராதம் விதிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.