சென்னை: கனமழையால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள, விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேஎஸ் அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் பெய்த கடும் மழையினால், தமிழ்நாட்டில் அறுவடை நிலையில் இருந்த நெற்பயிர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகிவருகின்றன. பாதிக்கப்பட்ட பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலையில் அழுகி நாசமாகி விட்டன.
பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய விவசாயிகள் பயிர் பாதிப்பினால் சொல்லொனா துன்பத்தை அனுபவித்துவருகின்றனர். காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, அரியலூர், போன்ற மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக திறந்துவிடப்பட்ட அணைகளின் மூலம் வெள்ளப்பெருக்கில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதுதவிர நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் சகஜ வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கனமழை பெய்கின்ற காலங்களில் ஈரப்பதம் உள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால், சமீபகாலமாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களை சேமிக்க கிடங்கு வசதி இல்லாததால், மழையில் நனைந்து பெரும் இழப்பை சந்தித்துவருகின்றன.
விவசாயிகளிடமிருந்து ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு அரசு தயாராக இல்லை. ஆகவே, ஈரப்பதம் கொண்ட நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கடும் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக வழங்க அரசு அறிவித்துள்ளது. இது யானைப் பசிக்கு சோளப் பொரி வழங்குவதற்கு ஒப்பாகும். விவசாயிகளின் நஷ்டத்தை மதீப்பிடு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு குறைந்தப்பட்சம் ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டில் கனமழைக்கு 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வருவாய் மற்றும் விவசாயத்துறை அலுவலர்கள் மூலம் பாதிப்பை மதிப்பீடு செய்து இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா? பதிலளிக்கிறார் கேஎஸ் அழகிரி