கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கடந்த மே 10ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கை அறிவித்தது. இருப்பினும், தொற்றுப் பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால், தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி மே 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கானது ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை ஞாயிறு ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை முக்கிய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
எவை எவைக்கு அனுமதி?
• இன்றும் நாளையும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி. இதற்காக 4500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
• பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கும் மருந்தகம், நாட்டு மருந்துக் கடை இயங்கவும் அனுமதி
• உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் மட்டுமே காய்கறிகள், பழங்கள் விற்பனை
• உணவகங்களில் பார்சல் சேவைக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும் இரவு 6 மணி முதல் 9 மணி வரையும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.