சென்னை: பெங்களூருவைச் சேர்ந்த விஜயலட்சுமி (35) என்பவர் 2015ஆம் ஆண்டு தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் 5 சவரன் தங்க நகையை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் அவரது நகை அறுந்துவிட, அதை எடுத்துக்கொண்டு பெங்களூரு சிட்டியில் உள்ள அதே பிரபல நகைக்கடைக்குச் சென்று நகையை மாற்றித் தருமாறு கூறியுள்ளார்.
நகையை பரிசோதனை செய்த நகைக்கடை மேலாளர் நகையின் உள்ளே அதிகளவில் கண்ணாடி துகள்கள் இருப்பதால் எங்களால் மாற்றமுடியாது எனவும், தாங்கள் வாங்கிய நகைக்கடையிலேயே மாற்றிக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
புகார்
இதனையடுத்து சென்னை வந்த விஜயலட்சுமி, தி.நகரில் உள்ள சம்பந்தப்பட்ட நகைக்கடைக்குச் சென்று முறையிட்டபோது, அவர்கள் அலட்சியமான முறையில் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தி.நகர் துணை ஆணையரிடம் அந்த நகைக்கடை மீது நடவடிக்கை எடுக்குமாறு விஜயலட்சுமி புகார் அளித்தார்.
இச்சம்பவம் குறித்து பாண்டி பஜார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடந்த வாரம் ஒரே வாடிக்கையாளருக்கு இரண்டு முறை போலி தங்க நகைகளை விற்பனைசெய்த காரணத்தினால் மற்றொரு பிரபல தங்க நகைமாளிகை மீது மாம்பலம் காவல் துறையினர் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'இன்றைய தங்கம் விலை நிலவரம்'