அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தனது பதவிக்காலத்தில் சுமார் 280 கோடிக்கு ஊழல் செய்துவிட்டதாக அரசுக்குப் புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனை விசாரணை அலுவலராக நியமனம்செய்து உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா கடந்தாண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி உத்தரவிட்டார்.
சூரப்பா மீதான விசாரணை 80% நிறைவு
11:00 April 12
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை 80 விழுக்காடு நிறைவுபெற்றுள்ளது என விசாரணை அலுவலர் நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.
விசாரணைக் குழுவின் காலம் 2021 பிப்ரவரி 11ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து மே மாதம் வரை விசாரணை அலுவலரின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அலுவலரும், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கலையரசன் கூறும்போது, "முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. புகார் அளித்தவர்களிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் அலுவலர்களிடம் விசாரணை செய்துவருகிறோம். விசாரணை 80 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. மேலும் நான்கு அலுவலர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்தப் பணிகள் இந்த வாரத்தில் முடிவடையும். அதனைத் தொடர்ந்து அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று வேறு ஊர்களுக்குச் சென்றாலும் அவருக்கு அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்படும்.
அதற்கு எழுத்துப்பூர்வமாகவோ அல்லது நேரிலோ விளக்கம் அளிக்கலாம். அந்த விளக்கம் ஆணையத்திற்கு திருப்தி அளிக்காவிட்டால், அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்துவோம்.
விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா இருந்தது வரை ஆவணங்களை முழுமையாக ஒப்படைக்கவில்லை. மேலும் சில ஆவணங்கள் பல்கலைக்கழகத்திலிருந்து பெற வேண்டியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் சில தவறுகள் நடந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் தவறுகள் நடைபெற்றிருந்தால் அதற்கு முழுப் பொறுப்பும் துணைவேந்தரே ஏற்க வேண்டும்" எனக் கூறினார்.