சென்னை:மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் திருக்கோயிலில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 6) முதல் தமிழிலும் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்திற்கான அறிவிப்புப் பலகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட அமைச்சர் சேகர் பாபு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் விவரம் குறித்த பதாகையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேகர் பாபு அவரது ட்வீட்டில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தின் அறிவிப்புப் பலகையை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டு முதற்கட்டமாகத் தேர்வுசெய்யப்பட்ட 47 திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண் பக்தர்களுக்குத் தெரிவிக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.
கபாலீசுவரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய இவர்களைத் தொடர்புகொள்க:
- பாலாஜி குருக்கள் - 94447 22594
- கபாலி குருக்கள் - 94447 75859
- வேங்கட சுப்பிரமணியன் குருக்கள் - 98401 66701
இதையும் படிங்க: காஞ்சி ஏகாம்பர நாதர் கோவில் நிலம் மீட்பு