சென்னை:சென்னையில் நேற்று (ஏப். 23) நடைபெற்ற 'TechKnow-2022' கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "வேலை இல்லை என்று ஒரு பக்கம் இளைஞர்கள் சொல்கிறார்கள். வேலை இருக்கிறது, ஆனால் அதற்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று தொழில் நிறுவனங்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.
எத்தகைய தகுதியை இளைஞர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்று நிறுவனங்கள் சொல்லியாக வேண்டும். அத்தகைய தகுதியை இளைஞர்களுக்கு ஊட்டுவதாக பல்கலைக்கழகங்கள் மாற வேண்டும். இந்த பரஸ்பர நட்புறவு உங்களுக்குள் இருக்க வேண்டும். அதனை அரசு அலுவலர்கள் உணர்ந்திருப்பதன் வெளிப்பாடுதான் இதுபோன்ற கருத்தரங்குகள்.
உயர் கல்வி விகிதம் ஒப்பீடு: நம்பர் 1 முதலமைச்சர் என்று சொல்வதைவிட, நம்பர் 1 தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும். அதற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை எல்லாம் தொடர்ந்து நம்முடைய அரசு நிறைவேற்றி வருகிறது என்று உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் என்பது அகில இந்திய அளவில் 27.1 விழுக்காடாக இருக்கிறது. ஆனால் தமிழகம் 51.4 விழுக்காடு பெற்று சிறப்பான இடத்தில் உள்ளது.
இந்தாண்டு இந்த புள்ளிவிவரத்தை எடுத்தால் 54 விழுக்காடாக கூட கூடியிருக்கலாம். உயர்கல்வியில் அனைத்து மாணவர்கள் சேர்க்கை விகிதங்களிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்று முன்னிலையில் இருக்கிறது. உயர்கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் மொத்த மாணவர்களின் சேர்க்கை விகிதத்தின் அதீத வளர்ச்சிக்கும், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவு மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் சான்றாக உள்ளது.
கல்வி நலத்திட்டங்கள்: இலவச பாடப்புத்தகங்கள், பேருந்து பயண அட்டை, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டம், ஆதிதிராவிட மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, முதுநிலை பட்டமேற்படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை போன்றவைகள் தமிழ்நாட்டில் வழங்கப்படுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் முன்னுரிமை அடிப்படையில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியதோடு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு இருக்கிறது. நம்முடைய சாதனைக்கு சமூகநீதிக் கொள்கையும் முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.
ஆர்வமும், துடிப்பும் மிக்கவர்கள்: பல்வேறு பன்னாட்டு தொழில்துறை நிறுவனங்கள் தமிழ்நாட்டிலல் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் பொறியியல் பட்டதாரி மாணவர்கள் வளாகத் தேர்வு (Campus Interview) மூலம் உயர்நிலை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்களும் இயல்பிலேயே புதியதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்ற துடிப்பும், உணர்ச்சியும் உள்ளவர்கள்.