சென்னை: கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகளை முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அரசின் சார்பாக பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அமைச்சர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியாவிலேயே வேகமான ஆட்சி திமுக
இதனால் அமைச்சர்கள் கேட்கும் தேதிகளை என்னால் கொடுக்க முடியவில்லை. அரசினால் அறிவிக்கப்படும் சில திட்டங்கள் அந்த நேரத்துக்குத் தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள் சில ஆண்டுகளுக்குத் தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள் தான் தலைமுறை தலைமுறைக்குப் பயனுள்ளதாக இருக்கும். அந்த வரிசையில் தலைமுறை தலைமுறைக்குப் பயனுள்ளதான திட்டம் தான் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கக் கூடிய திட்டம்.
அதிலும் குறிப்பாக விவசாயிகள் பயன்பெறுகின்றனர் என்றால், தங்களுக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்து மக்களுக்கே உணவுப் பொருளை உற்பத்தி செய்து தரப் போகிறார்கள். அத்தகைய மகத்தான திட்டம் தான் இந்த திட்டம். கடந்த 2006 -11ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 2லட்சத்து 9ஆயிரத்து 910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டன.
கடந்த அதிமுக அரசில் பத்து ஆண்டு காலத்திலே சுமார் 2 லட்சம் இணைப்புகள் மட்டும் தான் தரப்பட்டன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த நான்கு மாத காலத்தில் ஒரு லட்சம் இணைப்புகளை கொடுக்கப் போகிறோம். இதை விட வேகமான ஆட்சி இந்தியாவில் இருக்கவே முடியாது என்கிற அளவுக்கு நாம் செயல்பட்டு வருகிறோம்” என பெருமிதல் கொண்டார்.
திமுக ஆட்சி என்பதே விவாயிகளின் ஆட்சி
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு லட்சம் புதிய இணைப்புகள் வழங்குகிறோம். அதிலும் பெரும்பாலும் இலவசமாக வழங்குகிறோம். தமிழ்நாடு மின்சார வாரியம் செழிப்பாக இருக்கிறது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். செழிப்பாக அல்ல, சீரழித்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் கடந்த அதிமுக ஆட்சியினர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் 1.59 லட்சம் கோடி ரூபாய்க்கு கடனில் இருக்கிறது. ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய நிலைமையில் இருக்கிறது. அதிமுக ஆட்சியில் மிக அதிகமான விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்துள்ளார்கள். குறுகிய கால ஒப்பந்தங்களாக இல்லாமல் மிக நீண்ட கால ஒப்பந்தங்களாகப் போட்டுள்ளார்கள்.
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் விழா அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பதிவேட்டில் இருப்பதும், கையில் இருப்பு இருப்பதும் வித்தியாசமாக உள்ளது. பராமரிப்புப் பணிகளே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடக்கக்கவில்லை. திமுக ஆட்சி என்பதே விவாயிகளின் ஆட்சியாக, வேளாண்மை புரட்சி செய்யும் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்துள்ளது. மண்ணையும் மக்களையும் காப்பதில் எப்போதும் யாருக்கும் சளைக்காத ஆட்சி தான் திமுக ஆட்சி.
மண்ணையும் மக்களையும் காப்போம்
இதற்கு ஒரு உதாரணம் சில நாள்களுக்கு முன்னால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக துணிச்சலாக தீர்மானம் நிறைவேற்றிய ஆட்சி திமுக ஆட்சி என்பதை விவசாயப் பெருமக்கள் மறக்க மாட்டார்கள். காவிரி போன்ற பெரிய பிரச்சினையாக இருந்தாலும், விவசாய மக்களின் சிறு கோரிக்கையாக இருந்தாலும் அதற்கு உடனடியாகச் செவி கொடுத்து அதனை நிறைவேற்றித் தரும் ஆட்சி தான் திமுக ஆட்சி.
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் இலவச மின்சாரத்தைப் பெறும் விவசாயிகள் தங்களின் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இது தமிழ்நாட்டில் விவசாயப் புரட்சிக்கு அடித்தளமாக அமையட்டும். உற்பத்திப் பரப்பு அதிகமாக இது உதவிகள் செய்யட்டும். அனைவரும் சேர்ந்து இம்மண்ணையும் மக்களையும் காப்போம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட தமிழ்நாடு அரசின் பல்வேறு உயர் அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:'ஜெ. கொண்டுவந்த திட்டத்திற்கு மட்டுமே அடிக்கல் நாட்டிவரும் திமுக!'