தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்தப்போவதில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Oct 28, 2021, 9:25 PM IST

சென்னை: இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இத்திட்டம் குறித்து ஊடகங்கள் வாயிலாக சில மாற்றுக் கருத்துகள் அரசின் கவனத்திற்குத் தெரிய வந்துள்ளது. அவற்றை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் முறை, அவர்களுடைய பங்களிப்பு, அவர்களால் கற்பிக்கப்படும் மாணவ மாணவியரின் கற்றல் மேம்பாடு ஆகியவை தொடர்ந்து கல்வியாளர்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும்.

மானுடம் இதுவரை சந்தித்திராத ஒரு பெருந்தொற்றிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறோம். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அதிக இழப்பைச் சந்தித்தவர்கள் பள்ளிக் குழந்தைகளே. பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஆய்வு செய்த கல்வியாளர்களும், யுனெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளும், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலுள்ள வல்லுநர்களும் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக, முழுவதும் மாநில அரசின் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைபிடிப்பவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாகத் தொடர அனுமதிக்கப்படுவர். இதுமட்டுமல்ல, 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும் நேரடியாகச் சென்று பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரும் தொடர்ந்து பள்ளிக்கு வருவது உறுதி செய்யப்படும்.

மேலும், வருகிற கல்வியாண்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம்

ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பது ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலும், மாநில அளவிலான கல்விக் கொள்கையினை வகுத்திட கல்வியாளர் அடங்கிய குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் என்று தோழமை கட்சிகள் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தன்னார்வலர்கள் அரசுப் பள்ளிகளின் நல்லெண்ணத் தூதுவர்களாக, ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் , சமூகத்திற்கும் இணைப்புப் பாலமாகச் செயல்படுவர்.

எனவே, இத்திட்டத்தின் நோக்கத்தினைப் புரிந்துகொண்டு, அனைத்துத் தரப்பு மக்களும், இத்திட்டத்தினை ஆதரித்து, நம் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்திற்கு உதவிடும் வகையில், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்திட கைகோர்த்திட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: IIT நுழைவுத் தேர்வில் வென்ற ஏழை மாணவனின் கல்விச் செலவை அரசு ஏற்கும் - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details