சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு, கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று(ஜூன்.24) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.
கரோனாவிற்கு முற்றுப்புள்ளி:
அவர் அளித்த பதிலுரையில், "கரோனாவிற்கு இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்கும். தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில்தான் ஆட்சிக்கு வந்தோம்; தற்போது ’இல்லை இல்லை’ என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.
கரோனா தொற்று குறைந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெறும் வகையில் அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரிகளிலும் போஸ்ட் கோவிட் கிளினிக் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், கரோனா தொற்று 7 ஆயிரமாக குறைந்துள்ளது.
கரோனா 3வது அலை வந்தாலும், அதை எதிர்க்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படம்போல், பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை அதிமுக மறைந்துவிட்டதா? ஏப்ரல் மாதத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த தவறியதுதான், கரோனா பரவல் அதிகரிக்கக் காரணம். அதற்கு அதிமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
கரோனா தடுப்புப் பணிகளை பொறுத்தவரையில், இது மக்கள் நலன் சார்ந்த பிரச்னை. இதைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை 'கரோனா' - காரசார விவாதம்:
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆட்சியிடம் கரோனா தொற்று குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டச் சொன்னேன்; ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. ஆட்சிக்கு வரப்போவதில்லை என அலட்சியமாக இருந்ததால்தான் கரோனா தொற்று அதிகரித்தது" என்றார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கரோனா தொற்றை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம் நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினேன். முதலமைச்சர் குறிப்பிட்டதை போல் அலட்சியமாக இல்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அடக்க முடியாத யானை திமுக' - எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் பதிலடி!