சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வரும் செப்டம்பர் 6ஆம் தேதிவரை நீட்டித்து கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். கூடுதலாக, வரும் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.
அவற்றிற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்கள் குழு, அரசு உயர் அலுவலர்களுடன் இன்று (ஆகஸ்ட் 30) ஆலோசனை மேற்கொள்கிறார்.
பள்ளிகள் திறப்பு உறுதியா?
இக்கூட்டத்தில், நாளை மறுநாள் (செப்டம்பர் 1) திறக்கப்படவுள்ள பள்ளிகள் (9, 10, 11, 12ஆம் வகுப்புகள் மட்டும்), கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது குறைந்துவிட்ட போதிலும், உடனடியாக பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது அவசியமில்லை என மருத்துவ வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் நவீத் விக் அளித்த பேட்டியில் கூறியதாவது, "குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள கற்கும் சூழல் குறித்து பேசும் நாம், நம் இடர்களையும் பார்க்க வேண்டும். நன்மை தீமைகளை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மாணவர்கள் அறைக்குள் இருக்கும் சூழலில் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
விநாயகர் சதுர்த்தியும் விரிவான ஆலோசனையும்
அடுத்த இரண்டு மாதங்களில் பண்டிகைக் காலம் வருவதையும் கருத்தில்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படாததால், போக்குவரத்து, தனிமைப்படுத்துதல், தகுந்த இடைவெளியை உறுதிசெய்தல் போன்ற பல சிக்கல்கள் இங்கே உள்ளன. கரோனா இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
இச்சூழலில் பள்ளிகளைத் திறப்பதில் நிதானம் காட்டுமாறு மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே, கரோனா இல்லாத நாட்டை நம்மால் கட்டமைத்திட முடியும்" என்றார். இதனால், ஸ்டாலின் இன்று நடைபெறும் கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்தும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் தீர்க்கமாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், மருத்துவம், வருவாய், காவல் ஆகிய துறைகளின் அலுவலர்களுடனும் ஸ்டாலின்ஆலோசனை நடத்த இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.