தமிழ்நாட்டின் முதலமைச்சராக 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்' என உறுதிமொழி எடுத்துக்கொண்டது முதல், மாநிலத்தில் அடுத்தடுத்து பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வருகிறார், முதலமைச்சர் ஸ்டாலின்.
பதவியேற்பு விழாவிற்கு அதிமுகவின் முக்கியப்புள்ளிகள், கமல், சீமான், பாஜகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார். பாஜக சார்பில் இல.கணேசனும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா செய்த வெறுப்பரசியலை, முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா ஓமந்தூரார் தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினார். பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகத்தை நடத்தினார்.
திமுக ஆட்சி அமைந்த உடன் தலைமைச்செயலகப் பணிகள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தான் நடைபெறுகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மட்டுமே கலைவாணர் அரங்கில், தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் நடத்தப்பட்டன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தையும், தனது படத்தையும் உடனே அகற்ற உத்தரவிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்.
மாற்றியமைக்கப்பட்ட அரசு இயந்திரங்கள்
புதிய அரசு பொறுப்பேற்ற உடன் களத்தில் திறமையாக செயல்பட்ட அலுவலர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்களாக உதயச்சந்திரன், அனு ஜார்ஜ், சண்முகம் உள்ளிட்ட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி என திறம்பட பணியாற்றக் கூடிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசிப்பதற்காக சட்டப்பேரவைக் குழு உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 13 பேர் இடம்பிடித்தனர். குறிப்பாக அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன் உள்ளிட்ட 13 பேர் நியமனம் செய்யப்பட்டு, ஊரடங்கு குறித்து மருத்துவக்குழு உடனும், சட்டப்பேரவைக் குழுவுடனும் முழு ஆலோசனைகள் பெறப்பட்டு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் ஆளும்கட்சி தன்னிச்சையாக முடிவெடுத்துவந்த நிலையில், தற்போதைய ஆட்சியில் அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேபோல், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.கே.பழனிசாமி தங்கி இருந்த வீட்டில் தொடர்ந்து தங்குவதற்கு, அவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கும் திமுக அரசு அனுமதி அளித்துள்ளது.