தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமெரிக்க பல்கலை. தலைவராகத் தமிழர் தேர்வு: ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு ஸ்டாலின் வாழ்த்து

இலினொய் பல்கலைக்கழகத்தின் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜகோபால் ஈச்சம்பாடியால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்திய துணைக்கண்டத்துக்கே பெருமை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு ஸ்டாலின் வாழ்த்து
ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு ஸ்டாலின் வாழ்த்து

By

Published : Jun 18, 2021, 2:13 PM IST

சென்னை: அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் செயல்பட்டுவரும் இலினொய் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவராக முதன்முறையாக தமிழரான ராஜகோபால் ஈச்சம்பாடி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

சுமார் 131 ஆண்டுகள் பழமையான இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்திய துணைக்கண்டத்துக்கே பெருமை

சென்னையில் பிறந்து, வளர்ந்த ராஜகோபால் ஈச்சம்பாடி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பிரிவில் தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார்.

ராஜகோபால் ஈச்சம்பாடி

தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலேயே எம்.பி.ஏ. படித்த அவர், இதையடுத்து அமெரிக்காவில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், "அமெரிக்க இலினொய் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தலைவராகத் தமிழர் ராஜகோபால் ஈச்சம்பாடி பொறுப்பேற்பது தமிழர்களுக்குப் பெருமை!

தேமதுரத் தமிழர் புகழ் திக்கெட்டும் பரவட்டும்!

இந்தத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் முதல் இந்தியர் ராஜகோபால் ஈச்சம்பாடி என்பதால், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் மட்டுமின்றி இந்திய துணைக்கண்டத்திற்கே உலகளாவிய பெருமையை அவர் பெற்றுத் தந்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 16 அன்று இலினொய் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கும் ராஜகோபால் ஈச்சம்பாடி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக் கழகம், சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகத் தெரிவித்திருப்பது, பிறந்த மண் மீது அவர் கொண்டுள்ள மதிப்புமிகு பற்றுதலின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது!

ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு ஸ்டாலின் வாழ்த்து

தமிழர்களின் தொழில்நுட்ப அறிவின் உலகளாவிய உயரத்திற்குச் சான்றாக விளங்கும் ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு, தமிழ்நாட்டு மக்களின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைப் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேமதுரத் தமிழர் புகழ் திக்கெட்டும் பரவட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழல்' - மா. சுப்பிரமணியன் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details