சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30ஆம் ஆண்டு விழாவையொட்டி மூன்று நாட்கள் கருத்தரங்கம் ஆகஸ்ட் 7இல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்து சாதனை மலரை வெளியிட்டனர்.
விழாவில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பேசுகையில், "வேளாண்மை ஆதிகாலம் முதல் தொடரும் தமிழர்களின் தொழில். மனித வாழ்வோடு இணைந்து நூற்றுக்கணக்கான தொழில்கள் இருந்தபோதும் முதலாவதாக இருப்பது வேளாண் தொழில்தான்" என்றார்.
மேலும் அவர் பேசுகையில், "வேளாண்மை துறை நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு குறியீடு. 2011-12 முதல் 2015-16 வரை வேளாண்மைத் துறைக்கு சுமார் 23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழ்நாடு அரசு குடிமராமத்து பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது" என்று பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "இரண்டாம் பசுமைப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரமாகசெயல்பட்டுவருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் ஆறாவது முறையாகத் உணவு உற்பத்தியில் தமிழ்நாடுமுதலிடம் வகிக்கிறது" என்றார்.
கருத்தரங்கத்தில் பேசிய முதலமைச்சர், துணை முதலமைச்சர் மேலும், "தண்ணீர் பிரச்னை தமிழ்நாட்டில் பிரதான பிரச்னையாக உள்ளது. இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்துவிட்டது. ஆனாலும் தொடர்ந்து குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.