சென்னை:நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வுசெய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் அமைத்தது.
இந்தக் குழு பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கருத்துகளைப் பெற்றது. அதில், 86 ஆயிரத்து 342 மனுக்கள் வரப்பெற்றன.
ஏ.கே. ராஜன் குழு அறிக்கை
அந்த மனுக்களையும், மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு வருவதற்கு முன்னும், நீட் தேர்வு வந்த பின்னும் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்ட தரவுகளையும் ஆய்வுசெய்ய இந்தக் குழு நான்கு முறை கூடி, அதன் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கையைத் தயார் செய்தது.
165 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை கடந்த ஜூலை 14ஆம் தேதி ஸ்டாலினிடம் ஏ.கே. ராஜன் குழு சமர்ப்பித்தது.
அறிக்கையின் அடிப்படையில் மசோதா
இந்த அறிக்கையில், "நீட் தேர்வை ரத்துசெய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். நீட் தேர்வை ரத்துசெய்ய தனியாகச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம்.
நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டம் இயற்றுவது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூகநீதியை உறுதிசெய்யும். மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்திட வேண்டும்" போன்ற பரிந்துரைகளை அளித்திருந்தது.
ஏ.கே. ராஜன் குழு அறிக்கையில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று ஆளுநர் மாளிகையில் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு விலக்கு குறித்து ஸ்டாலின், ஆளுநரிடம் ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: வரலாற்று வெற்றியை நோக்கி திமுக!