தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

cm mk stalin announced Diaspora Tamil Welfare Board
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

By

Published : Oct 6, 2021, 1:13 PM IST

Updated : Oct 6, 2021, 4:03 PM IST

சென்னை:இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக நம்முடைய தமிழினம்தான் இருக்கிறது என்றும், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு என அதில் கூறியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும், தாய்தமிழ்நாட்டின் கடமை எனத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர் நல வாரியம்

புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேர் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும் எனவும் புதிய வாரியத்திற்கு மூலதன செலவினமாக, 1.40 கோடி ரூபாய், பின்னர், நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழர் தரவுத்தளம்

மேலும், "புலம்பெயர் தமிழர் குறித்த தரவு தளம் (Database) ஏற்படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டம், அடையாள அட்டையுடன் வழங்கப்படும்.
வெளிநாட்டிற்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.

புலம்பெயர் தமிழர் நல வாரியம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகத் தமிழர்கள் புலம்பெயரும்போது, பயண புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஆனால், இப்பயிற்சியானது சென்னை மட்டுமின்றி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

சட்ட உதவி மையம்

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் வலைதளம், கைப்பேசி செயலி (Mobile application) அமைத்துத் தரப்படும். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு என தனியாக சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.

கோவிட்- 19 பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்திட, அதிகபட்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க

கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று அங்கே நிரந்தரமாக குடியுரிமை பெற்றுள்ள தமிழர்களின் வாரிசுகளுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை உருவாக்கிடவும், தமிழ் மொழியினை கற்றிட ஏதுவாகவும், தமிழ் இணைய கல்விக் கழகம் மூலமாக குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படும்.

புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாள்

அதுமட்டுமின்றி, அங்குள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவிப்பதற்காக ஊக்கத்தொகை மற்றும் தமிழ் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும். புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும்.

இச்சங்கங்களின் மூலமாக நம்முடைய கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு பரிமாற்றங்கள் நடைபெறும். இதற்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் நாள் புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக கொண்டாடப்படும்" எனவும் அந்த மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:வள்ளலார் பிறந்தநாள், 'தனிப்பெருங்கருணை தினமாக' கொண்டாடப்படும் - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

Last Updated : Oct 6, 2021, 4:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details