செங்கல்பட்டு:பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் சமூக மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவி, கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல், மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ. 4) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,நரிக்குறவர், இருளர் சமூகத்தைச் சேர்ந்த 282 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குறிப்பாக, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்பவருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கியபோது, அஸ்வினி கண்ணீர் மல்க மேடையில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.அப்போது முதலமைச்சருக்கு அவர் பாசி மாலை அணிவித்தார்.