சீனாவில் உயிா்க்கொல்லியான கரோனா (corona) என்ற வைரஸ் வேகமாகப் பரவி 10-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனால் உலக நாடுகளிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சீன நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளை, விமான நிலையத்திலேயே மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு, சீனாவிலிருந்து நேரடி விமான சேவை இல்லை என்றாலும் ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகள் வழியாகப் பயணிகள் வருகின்றனர். இதையடுத்து, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்திற்கு ஹாங்காங்கிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய அலுவலர்கள் முடிவுசெய்தனர்.
பன்னாட்டு முனையத்தில் பயணிகள் வருகைப் பகுதியில் பயணிகள் விமானத்தை விட்டு இறங்கி, குடியுரிமை சோதனைப் பகுதிக்குச் செல்லும்முன், மூன்று சிறப்பு மருத்துவக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மருத்துவர் தலைமையில், ஒவ்வொரு கவுன்ட்டரிலும் இரண்டு மருத்துவ உதவியாளா்கள் வீதம் ஆறு பேர் பணியில் உள்ளனர்.