கரோனா என்ற இந்த தொற்றின் தாக்கமானது, தற்போது அதிகளவில் பரவி வருகிறது. அதேசமயம் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன்மூலம் பெற்றோர்களை இழக்கும் குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகிவிடுகிறது. இதைக் கவனிக்கும் சில அரசு சாரா நிறுவனங்களும் (தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்), சில நபர்களும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளுமாறு சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கின்றனர். இதனைப் பயன்படுத்தி சிலர் சட்டத்திற்குப் புறம்பான முறையில் தத்தெடுக்க முயல்கின்றனர்.
இது சட்டவிரோதமானது என்று சமூக ஆர்வலர்கள் பொங்கி எழுகின்றனர். அதேசமயம் இதுபோன்ற சட்டவிரோத தன்னார்வ தொண்டு நிறுவனங்களைக் கண்காணிப்பதோடு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர். மேலும், இந்தக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள நினைப்பவர்கள், உறவினர்கள் சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்க சைல்ட் லைன் எண் 1098ஐ அழைக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
கரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரிப்பதால், இதன்மூலம் பெற்றோர்களை இழக்கும் குழந்தைகளுக்காக உதவி மையம் ஏற்படுத்தி, அதன்மூலம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குழந்தைகளின் உறவினர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகளைப் பெறுகின்றன. இருப்பினும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்த குழந்தைகளுக்கு முறையான ஏற்பாடுகளைச் செய்வது கடினம்.
தகவலின்படி, தமிழ்நாட்டில் 14 தத்தெடுப்பு முகவர் நிலையங்களும், குழந்தைகளுக்கான சுமார் 400 வீடுகளும் உள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள சைல்ட் லைன், ஹெல்ப்லைன் (1098) எண்ணுக்கு, குழந்தைகளில் பெற்றோர்கள் குறித்து எந்த அழைப்பும் வருவதில்லை, ஆனால் உணவு மற்றும் ஆதரவு வேண்டும் என அழைப்புகள் வருகின்றன. இச்சூழ்நிலையில் அவர்களைப் பாதுகாக்க வேண்டுமென அலுவலர்கள் சுகாதாரத் துறையிடம் தெரிவிக்கின்றனர்.
கரோனா பாதிப்பைப் பயன்படுத்தி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் கூறுகின்றனர். இது முற்றிலும் சட்டவிரோதமானது, இந்த குழந்தைகளுக்கு உதவ நல்ல இதயங்கள் உண்மையில் இருக்கலாம். ஆனால், இதற்கொன்று சில சட்ட வழிமுறைகள் உள்ளன. மேலும் இதுபோன்று கூறியவர்களைத் தொடர்புகொள்ள முயற்சித்தால், அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை, செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்கிறார், சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான தமிழ்நாடு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் பி. மோகன்.