தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 11, 2022, 12:12 PM IST

ETV Bharat / city

கோயம்புத்தூரில் இரு மேம்பாலங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

கோயம்புத்தூரில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், கட்டப்பட்ட இரண்டு மேம்பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

Chief Minister
Chief Minister

சென்னை: கோயம்புத்தூரில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்பில் 230 கோடி ரூபாய் செலவில் 3.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட நான்கு வழித்தட மேம்பாலத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இப்பாலம் திறக்கப்படுவதால், ராமநாதபுரம், ஓலம்பஸ் மற்றும் சுங்கம் ஆகிய மூன்று முக்கிய சந்திப்புகள் மற்றும் அல்வேனியா பள்ளி சந்திப்பு, சவுரிபாளையம் சந்திப்பு, புளியகுளம் பிரிவு சாலை சந்திப்பு, வானொலி நிலையம் சந்திப்பு, பந்தய சாலை சந்திப்பு, வாலாங்குளம் சாலை சந்திப்பு ஆகிய ஆறு இதர சந்திப்புகளிடையே உள்ள போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, சிக்னல் மற்றும் சந்திப்புகளில் வாகனங்கள் நின்று செல்வதால் ஏற்படும் காலதாமதமும் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்களை தவிர்ப்பதற்கு உதவும் என்றும், சிங்காநல்லூரிலிருந்து அரசு மருத்துவமனை, இரயில் நிலையம், நகர்மண்டபம், உக்கடம் ஆகிய பகுதிகளுக்கு மக்களால் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக செல்ல முடியும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கவுண்டம்பாளையம் சந்திப்பில் 60 கோடி ரூபாய் செலவில் 1.17 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட 4 வழித்தட மேம்பாலத்தையும் முதலமைச்சர் காணொளி வாயிலாக மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இப்பாலம் திறக்கப்படுவதால், கவுண்டம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், இதன் மூலம் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, கூடலூர் மற்றும் மைசூர் செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவையிலிருந்து சீரடிக்கு தனியார் ரயில் - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details