சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அலுவலர்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகை அரங்கில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் பேசிய அவர், “கரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதிக மக்கள்தொகை கொண்ட பகுதி என்பதால் சென்னையில் வேகமாக கரோனா பரவுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூன்று வேளையும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்புப் பணிக்காக ஐஏஎஸ் அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 50 நோய் கண்டறியும் மையங்கள் மூலம் நாள்தோறும் 12 ஆயிரம் பேருக்கு சோதனைகள் செய்யப்படுகின்றன. அம்மா உணவகம் மூலமாக நாள் ஒன்றுக்கு ஏழு லட்சம் பேருக்கு உணவளித்து வருகிறோம். ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பாதிக்காத வகையில், நியாயவிலைக் கடைகள் மூலம் ஏப்ரல் மற்றும் மே மாத அத்தியாவசியப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், ஜூன் மாத பொருள்களும், நியாயவிலைக் கடைகள் மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.