மின்சார சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், ”2018 நவம்பர் 12 தேதியிட்ட எனது கடிதத்தில், ’முன்மொழியப்பட்ட மின்சார திருத்த மசோதா மாநில அரசின் சில அதிகாரங்களைப் பறிக்கிறது. விநியோகத்தில் உள்ளடக்கத்தைப் பிரிப்பது போன்ற தற்போதைய மின்சார சட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர முற்படுகிறது.
இது பொதுத் துறையில் மின்பயன்பாடுகளை முற்றிலும் சாத்தியமற்றதாக மாற்றும். முன்மொழியப்பட்ட புதிய வரைவு மசோதா, உரிமையாளர்களின் மூலம் இறுதி நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதை தனியார்மயமாக்க முயலுகிறது. இது மாநில பயன்பாடுகளுக்கும் பொதுநலனுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும்’ என்று ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எங்கள் விவசாயிகள் இலவச மின்சாரம் பெற வேண்டும் என்பதும், அத்தகைய மானியத்தைச் செலுத்தும் முறையை மாநில அரசே தீர்மானிக்க வேண்டும் என்பதும் தமிழ்நாடு அரசின் நிலையான கொள்கையாகும்.