தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் கரோனா இறப்பு 1.7% ஆக உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி - ஆட்சியர் கூட்டம்

சென்னை: நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் 85.45 விழுக்காட்டுக்கும் மேல் உள்ள மாநிலமாகவும், மிக குறைவாக 1.7 விழுக்காடு இறப்பு உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

meet
meet

By

Published : Aug 29, 2020, 3:07 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31ஆம் தேதியுடன் முடியவுள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 29) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் நோய்த் தொற்றின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான தளர்வுகளுடன் மக்களின் நலன் கருதி பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுவரை நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, அரசு சுமார் 7,162 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தியும், வீடு வீடாகச் சென்றும், காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்தும், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம். நமது மாநிலத்தில் தான் மிக அதிகமாக 146 ஆய்வகங்கள், அதாவது 63 அரசு மற்றும் 83 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. இதுவரை 45.73 லட்சம் நபர்களுக்கு RTPCR பரிசோதனை செய்யப்பட்டு, இந்தியாவிலேயே ஆய்வக பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

அதேபோல், அரசின் தொடர் நடவடிக்கைகளால், நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் (3,49,682 நபர்கள்) 85.45 விழுக்காட்டுக்கும் மேல் உள்ள மாநிலமாகவும், மிக குறைவான, அதாவது 1.7 விழுக்காடு இறப்பு உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.

எனவே, பொதுமக்களிடம் கரோனா தொடர்பாக போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பரிசோதனையின் போது மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளோரின் மாதிரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு, விரைந்து முடிவுகளை அறிவிக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைப்பிக்கப்படுகின்றனவா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

தமிழ்நாடு குறைவான இறப்பு விகிதத்தை கொண்டு இருந்தாலும், அதனை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்“ என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலர், பல்வேறு துறை செயலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மறைந்த ரகுமான்கானின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின் !

ABOUT THE AUTHOR

...view details