தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், நான்காவது முறையாக மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கரோனா தொற்றுக்கான மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக செயல்படுத்தப்பட வேண்டிய உத்திகள், மருத்துவ சிகிச்சை குறித்த வழிமுறைகள், இறப்புகளை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், நோய்த் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள், குறிப்பாக சென்னையில் கரோனா தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
மேலும், மாநிலத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்தை தொடங்குவது குறித்தும், அதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவக் குழுவிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். இக்குழு தரும் அறிவுரையின்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.