தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனோ வைரஸ் தொற்றின் தற்போதைய நிலவரம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டன. அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்பணிகளை தீவிரப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன்படி,
- தற்போதைய நிலைக்கு ஏற்ப எந்தெந்த தொழில்களை, பணிகளை தொடங்கலாம் என்பது பற்றி அறிக்கை அனுப்ப வேண்டும்.
- வெளி மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையை, மாநில வாரியாக கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
- விவசாயிகளுக்குத் தேவையான உபகரணங்கள், இடுபொருட்கள் எந்தவித தங்குதடையுமின்றி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- சிவப்பு மற்றும் ஆரஞ்சு பகுதிகளில் உரிய நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பச்சை பகுதிகளாக மாற்றிட போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- தேசிய மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், தடையின்றி சமூக விலகலைக் கடைப்பிடித்து நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
- கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Containment Zone) நாள்தோறும் 2 முறை கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.
- அம்மா உணவகங்கள், சமுதாய சமையல் கூடங்களில் தரமான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை கள ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
- மே மாத நியாய விலைக்கடைப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான டோக்கன்களில் நேரம், நாள் ஆகியவற்றை அச்சடித்து வழங்க வேண்டும்.
- காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் மற்றும் நியாய விலைக்கடைகளில் தகுந்த சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- காவல் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.