தலைமைச் செயலகத்தில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக கட்டடத்தை காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.
மேலும், வேலூர், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 34 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், பாலங்களைத் திறந்துவைத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படவுள்ள கட்டடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், 6 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடங்கள், பல்வேறு துறை கட்டடங்கள், பாலங்கள் என மொத்தம் 40 கோடியே 68 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ளவற்றையும் முதலமைச்சர் இன்று திறந்துவைத்தார்.