தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் 4 கோடியே 71 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆறு ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடங்கள், பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடம், தொழிற்பயிற்சி மையக் கட்டடம் மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவற்றை திறந்துவைத்தார்.
மேலும், 21 கோடியே 24 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூகநல ஆணையரக அலுவலகக் கட்டடம், பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஒருங்கிணைந்த சேவை மையத் திட்டத்தின் மூலம், குடும்பத்திலும், பொதுவெளியிலும் வன்முறையால் பாதிக்கப்படும் மற்றும் நிராதரவாக விடப்படும் பெண்களுக்கு தேவைப்படும் துரித சேவைகளான மருத்துவ உதவி, காவல் உதவி, சட்ட உதவி, மனநல ஆலோசனை, தற்காலிக தங்கும் வசதி ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் வழங்கிடும் வகையில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களிலும், பெரம்பலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகங்களிலும் 2 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடங்கள்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், தாராபடவேடு கிராமம், ராஜீவ் காந்தி நகரில், தரை மற்றும் முதல் தளத்துடன், 21 தங்கும் அறைகள், சமையல் அறை, உணவருந்தும் அறை ஆகிய வசதிகளுடன் 50 மகளிர் தங்கும் வகையில், 1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடம்.
சமூக பாதுகாப்புத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் அரசினர் மாணவர் பிற்காப்பு நிறுவனத்தில் 39 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிற் பயிற்சி மையக் கட்டடம், வேலூர் மாவட்டம், காட்பாடி, அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 23 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடம்; என மொத்தம் 4 கோடியே 71 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூகநலத்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்.