பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள கோயில்களில் பொது விருந்து நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நகரின் பல்வேறு கோயில்களில் நடந்த பொது விருந்தில் கலந்துகொண்டனர்.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கே.கே. நகர் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் நடந்த பொது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கோயிலில் சாமி கும்பிட்ட அவருக்கு நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அனைத்துத் தரப்பு மக்களுடன் அமர்ந்து முதலமைச்சர் விருந்து உண்டார். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் அவர் நன்றாகச் சாப்பிடுமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பா. வளர்மதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டார். கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் நடந்த பொது விருந்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார்.