சென்னை:ஹோட்டலில் கழிவறைக்கு வரும் பெண்களை செல்போனில் படம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட பெண்களை செல்போனில் வீடியோ எடுத்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது..
சென்னையை சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் புரசைவாக்கத்தில் உள்ள பிரபலமான ஹோட்டலுக்கு நேற்று(ஜூன் 29) இரவு சென்றுள்ளார். பின்னர் உணவகத்தில் இருந்த கழிப்பறைக்கு அப்பெண் சென்ற போது, திடீரென ஆண் கழிப்பறையிலிருந்த வாலிபர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக ஆண்கள் கழிப்பறையை மூடி கூச்சலிட்டு உள்ளார். பின்னர் வேப்பேரி காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து செல்போனில் படம் பிடித்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கரூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு புரசைவாக்கத்தில் வசித்து வரும் முகமது யூசுப்(22) என்பதும், ஹோட்டல் அருகே பிரபல ஷாப்பிங் கடையில் 2 ஆண்டுகளாக ஊழியராக பணிபுரிந்து வருவதும் ல் தெரியவந்தது.
பின்னர் யூசுப்பின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது, ஹோட்டலில் கழிப்பறைக்கு சென்ற 10க்கும் மேற்பட்ட பெண்களை யூசுப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் காவல்துறைக்கு தகவல் கொடுத்த பெண்ணின் புகைப்படத்தை யூசுப் டெலிட் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் யூசுப் கழிப்பறைக்கு செல்லும் பெண்களை செல்போனில் படம்பிடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் வேறு ஏதும் பெண்களின் புகைப்படங்கள் அழிக்கப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க வேப்பேரி போலீசார் செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். மேலும் தொடர்ந்து யூசுப்பிடம் வேப்பேரி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:’ஆபாச படத்தை வெளியிடுவேன்' என கானா பாடல்: காதலியை மிரட்டிய பாடகர் கைது