சென்னை:கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு அவர் மீது 7 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மீண்டும் சென்னை அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் அத்துமீறிய சம்பவம் நடந்துள்ளது. சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவர் அப்பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர் குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கரோனா பொது முடக்கம் அமலிலிருந்தபோது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றதால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளின் தொடர்பு எண்கள் அனைத்தையும் ஆசிரியர் ஸ்ரீதர் சேமித்து வைத்துக்கொண்டதாகவும், அதன் பின்னர் பள்ளி மாணவிகளிடம் நாம் இருவரும் வெளியே செல்லலாம் எனக்கூறி குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் பெற்றோர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.