சென்னை:சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை மாணவன் குமார், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி நேற்று முன்தினம் (டிசம்பர் 28) திருநின்றவூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய ஆடியோ பதிவால் கல்லூரி மாணவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், மாணவர்களிடையே மோதல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க காவல் துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக இரு கல்லூரி வளாகங்களிலும் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதேபோல குறிப்பிட்ட பேருந்து வழித்தடங்களிலும், சென்னை - கும்மிடிப்பூண்டி, சென்னை - அரக்கோணம், சென்னை - செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களிலும் வரும் ரயில்களில் ரயில்வே காவல் துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் உதவியுடன் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தி மோதலில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களை உடனடியாகக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை அடுத்து சற்று முன் மாதவரம் பேருந்து நிலையம் அருகே மோதிக்கொண்ட தியாகராய கல்லூரி, அம்பேத்கர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பிரச்சினையை ஏற்படுத்திவரும் கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறைத் தரப்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகளிர் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை: நல்லதொரு அறிவிப்புக்காக காத்திருப்பு!