நாளை நள்ளிரவு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி மெரினா கடற்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவர். எனவே, பாதுகாப்புப் பணியில் சுமார் 15 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பல்வேறு பாதுகாப்புப் பணிகளிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது.குறிப்பாக,
- திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கீழ்ப்பாக்கம், புளியந்தோப்பு, அயனாவரம் உள்ளிட்ட 368 இடங்களில், காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். வழிபாட்டு இடங்கள் உள்ளிட்டவை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டுள்ளன.
- சென்னையில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் ஐந்து முதல் பத்து வண்டிகள் வரை பாதுகாப்புப் பணியில் இருக்கும். மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மணலில் செல்லக்கூடிய ஏடிவி எனப்படும் வாகனமும் பாதுகாப்பு பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
- 25 குழுக்களாக காவல்துறையினர் பிரிக்கப்பட்டு பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்காணிக்கின்றனர். அவ்வாறு குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்குபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அவர்களின் கடவுச் சீட்டு சரிபார்த்தலின்போது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதை குறிப்பிட காவல்துறை முடிவு.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலன் கருதி அலைபேசி வாயிலாக கண்காணிக்கும் குழு அமைப்பு.
- கடற்கரை வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் திரும்பிப்போக மாற்றுவழி. பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு செல்லும் வழியில் வாகனங்களுக்கு அனுமதி ரத்து.