சென்னை மெட்ரோ ரயிலின் முதல் திட்டம், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான 23 கி.மீ. தூரத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலான 21 கி.மீ. தூரத்திலும் என இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. முதல் வழித்தடத்தில் கூடுதலாக வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் முதற்கட்ட திட்டத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. 8 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில் இரண்டு ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதையிலும், மற்றவை உயர்மட்ட பாலத்தின் மீதும் அமைந்திருக்கும்.
இந்நிலையில், 9.051 கி.மீ. தொலைவு கொண்ட வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவையின் முதற்கட்ட விரிவாக்க திட்டத்தில், இன்று டீசல் எஞ்சின் மூலம் அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தினர். வெற்றிகரமாக இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் வடசென்னை பகுதி, நகரின் வணிகம் நடக்கும் மையப்பகுதியுடன் இணைக்கப்படும். மேலும் அப்பகுதி மக்கள் குறைந்த நேரத்தில் அதிக தூரம் சென்று வர முடியும். இதனால் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் விளையும்.