சென்னை:தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, "முதலமைச்சர் விளையாட்டுத்துறையில் சரித்திர சாதனையை படைக்கும் வகையில், உலக சதுரங்க போட்டியை நடத்த அனுமதி பெற்று தந்துள்ளார். 1927இல் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை.
மேலும், 200 நாடுகளுக்கு மேற்பட்ட சதுரங்க வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 4 மாதத்தில் போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 25 கிராண்ட் மாஸ்டர்கள் சென்னையில் உள்ளதால் இந்தியாவின் சதுரங்க தலைநகராக சென்னை திகழ்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரத்தில் இந்த செஸ் விளையாட்டு போட்டிகள் ஜூலை 17 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.