சென்னை:கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என தெரிவித்தது.
இதனையடுத்து வருமானத்தை மறைத்ததற்காக ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.