ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டு, நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் இணைய வழியில் நடத்தப்படுகின்றன. இணைய வழி வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவ, மாணவியர் முயற்சிசெய்யும்போது, ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த வகை இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை, இணைய வழி வகுப்புகளுக்கு தடை கோரி, சென்னை புத்தகரத்தைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதேபோல், வகுப்புகளைச் கைபேசி, மடிக்கணினி மூலம் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இணைய வழி வகுப்புகள் நடத்த தடை விதிக்கவும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 2 மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிடவும் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஜூலை 15ஆம் தேதிக்குள் இணைய வழி வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.