சென்னை: எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் மீண்டும் 'அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்' எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அரசியலில் இனி ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் ஜீரோ தான் - ஜெயக்குமார்:இது குறித்து செய்தியாளரிடம் பேசிய ஜெயக்குமார், ”சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கும் தடைவிதித்துள்ளது. அதிமுக சட்ட விதிகளின்படி பொதுக்குழு உறுப்பினர்களால் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் எனவும்; பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என இந்தத் தீர்ப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
கட்சியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதும் செல்லும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அரசியலில் இனி ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் ஜீரோ தான். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழும் வகையில் தீர்ப்பு வந்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு”, எனத் தெரிவித்துள்ளார்.
கற்பனை கடலில் மிதந்து கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் - பொன்னையன்: இந்தத் தீர்ப்பு குறித்து அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையனிடம் பேசிய போது, ”பொதுக்குழு உறுப்பினர்கள் 98.5% ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என்ற ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள். அது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. பொதுக்குழு சட்டப்படிதான் நடந்தது என்பதை உறுதிப்படுத்தும் தீர்ப்பாக இது அமைந்துள்ளது.
பலாத்காரம், கொலை, கொள்ளை, அளவு கடந்த பொய்யை, அணிகலன்களாக கொண்டு ஆட்சி நடத்துகின்ற ஸ்டாலின் ஆட்சி ஒரு குப்பைத்தொட்டி ஆட்சி என்று மக்களுக்கு உணர வைக்கக்கூடிய ஒரு தலைமைக்கு கிடைத்த வெற்றி தான் இது. எடப்பாடி பழனிசாமிக்கும் பொதுக்குழுவுக்கும் கிடைத்த முழுமையான வெற்றி, இதுதான் உண்மை நிலை.
தன்னைப் பெற்ற தந்தை, கடவுளைப் போல வணங்கியது கருணாநிதியை என்றும்; கருணாநிதியின் வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பேன் என்றும் ஓபிஎஸ் சொன்னார். அவரது மகன் ரவீந்திரநாத் ஸ்டாலினிடம், ஒன்றரை ஆண்டுகள் ஆட்சி சிறப்பாக உள்ளது என்று சொன்னார். இப்படியாக ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரை எப்போது திமுகவை பாராட்டினாரோ அப்போதே ஓபிஎஸ்ஸும், ஓபிஎஸ்சை சார்ந்தவரும் செல்லா காசாகிவிட்டனர்.