சென்னை: மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை அடிப்படை வசதிகளுடன் கூடிய தனிச் சிறைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி மனுவுக்கு புதுச்சேரி அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மத்திய சிறையிலுள்ள பெண்கள் சிறையில் உள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் கிடைப்பதில்லை என்றும், போதிய பாதுகாப்பு கிடைப்பதில்லை என்றும் உத்திரவாகி பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பீமராவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “பெண்கள் சிறையில் பெருமாலானோர் 30 வயது முதல் 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் உறங்குவதற்கு தேவையான படுக்கை வசதிகள் இல்லாததால், தரையில் உறங்க வைக்கப்படுகின்றனர்.
அரசியலமைப்பு சட்டப்படி புதுச்சேரி பெரிய காலாப் பேட்டையில் 2008ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் என மூன்று பகுதிகளாக அமைக்கப்படவில்லை. மாறாக தண்டனை கைதிகளுக்கு ஒரு பகுதியும், விசாரணை கைதிகள், பெண் கைதிகளுக்கென மற்றொரு பிரிவு என இரண்டு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இராண்டாவது பிரிவிலுள்ள பொருள்கள் வைக்கும் சேமிப்பு அறையில் பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால், அடிப்படை வசதிகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் அவர்களுக்கென பெண்களுக்கு தனி மருத்துவமனை இல்லை.
அடிப்படை தேவைகளுக்காக கூட ஆண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியை தாண்டி பொதுப்பாதை வழியாக செல்லும் நிலைக்கு பெண் கைதிகள் தள்ளப்பட்டுள்ளது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது” என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சிறைக்குள் செல்வதற்கும், வெளியில் வருவதற்கும் ஒரே வழியாக அமைக்கப்பட்டுள்ளதால், ஆண் கைதிகளின் பாலியல் ரீதியான வன்முறைக்கும் பெண் கைதிகள் ஆளாவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ள பெண்களை உடனடியாக தனியாக பிரிப்பதற்கும், அடிப்படை வசதிகளுடன் கூடிய தனி சிறையில் அவர்களை அடைப்பதற்கும் புதுச்சேரி அரசு, தலைமை செயலாளர், சிறைத் துறை ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக புதுச்சேரி அரசு இரண்டு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.