கடந்த 14ஆம் தேதி சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அவரிடமிருந்து ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் பணமும், மூன்று கிலோ தங்கம், ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கடலோர மற்றும் வனத் துறை பகுதிகளில் தொழிற்சாலை, பெரிய கட்டுமானங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார்
தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஜெயந்த் முரளியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், 1996ஆம் ஆண்டு கடலோர மண்டல மேலாண்மை வரைபடத்தை மாற்றி, எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளக்கூடாது என்று கூறப்பட்ட எண்ணூரில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை, தொழிற்சாலை, துறைமுகங்கள், தனியார் கட்டுமானங்கள் பலவற்றிற்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடத்துள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த முறைகேட்டில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன், உயர் அலுவலர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டபோது, கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடத்தில் எந்தவித மாற்றமும் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மகேந்திரன் என்ற மீனவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
பூவுலகின் நண்பர்கள் அமைப்புச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பு இந்த விவகாரத்தில் முக்கியத் தொடர்புடைய சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன், இதர அலுவலர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர். இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தினால் சுற்றுச்சூழல் துறையில் பல முக்கிய உயர் அலுவலர்கள் சிக்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க...சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு: காவல் துறையின் புதிய முயற்சி!