சென்னை: மின்சார கட்டணம் செலுத்தவில்லை என குறுஞ்செய்தி அனுப்பி, மத்திய அரசு அலுவலரிடம் இருந்து நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை சென்னை சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளனர்.
முகப்பேரைச் சேர்ந்த மத்திய அரசு அலுவலர் ரோமி பைநாடன் என்பவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 'நீங்கள் மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை; செலுத்தவேண்டிய மின்கட்டணத்தை செலுத்தவில்லையெனில், மின்சாரம் துண்டிக்கப்படும்' என செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
மின்கட்டணம் செலுத்துமாறு குறுஞ்செய்தி:எனவே, குறுஞ்செய்தியில் அனுப்பிய செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டபோது, மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு உதவுவதாகக் கூறி செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்யுமாறு செல்போனில் தொடர்பு கொண்ட நபர் கூறியுள்ளார். இதனை நம்பிய நான், டீம் வியூவர் (TeamViewer) என்ற செயலியை டவுன்லோட் செய்தேன்.
ரூ.8 லட்சம் அபேஸ்:இந்த செயலியை டவுன்லோடு செய்த சில நேரங்களிலேயே, சிறிது நேரத்தில் மூன்று தவணையாக சுமார் 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம், எனது வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். எனவே, போலீசார் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு தான் இழந்த பணத்தை மீட்டுத் தரவேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் கொள்ளையடிக்கும் கும்பல்:யாரோ அடையாளம் தெரியாதவர்கள், டீம் வியூவர் (TeamViewer) என்ற செயலியின் மூலமாக இவரது கைப்பேசியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அவரது வங்கிக் கணக்கில் உள்ள தரவுகளை எடுத்து திருடி பணத்தை கொள்ளையடித்தது பின்னர் தெரியவந்தது.
போலீசாரிடம் அவர் அளித்தப்புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரனையில், கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரேசர் பே மற்றும் பிபிசிஎல் என்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் அடையாளம் தெரியாத நபர்களின் வேறு கணக்கிற்கு மாற்றம் செய்ய பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
பணத்தை மீட்ட சைபர் போலீசார்:உடனடியாக அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார், 2 பணப்பரிவர்த்தனை செயலி நிறுவனங்களைத் தொடர்புகொண்டு கொள்ளையடிக்கப்பட்ட 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை முடக்கினர். முடக்கப்பட்ட பணத்தை மத்திய அரசு அலுவலரான ரோமி பைநாடன் வங்கி கணக்கிற்கு திருப்பிச் செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டனர்.
மேலும், இவ்வாறு பணத்தை நூதன முறையில் ஆன்லைன் மோசடி செய்து கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கடந்த இரு தினங்களுக்கு முன்பு (ஜூலை 12), முன்னாள் வருமான வரித்துறைத் தலைவர் சீனிவாசன் என்பவரின் வங்கிக்கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று அரங்கேறியது.
BSNL-ல் இருந்து பேசுவதாக வந்த அழைப்பு:பிஎஸ்என்எல் (BSNL) எண் செயலிழக்காமல் இருக்க 24 மணி நேரத்தில் தொடர்பு கொள்ளுமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்ததை நம்பி, அந்த செல்போன் எண்ணிற்கு சீனிவாசன் தொடர்பு கொண்டு உள்ளார். முதலில் அந்த செல்போன் அழைப்பை யாரும் எடுக்கவில்லை. அதன்பின் மறுநாள் மற்றொரு நம்பரில் இருந்து அண்ணா நகர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, பல்வேறு தகவல்களை சீனிவாசனிடம் இருந்து பெற்றனர்.
10 நிமிடங்களில் ரூ.10 லட்சம் அபேஸ்: பின்னர், KYC வாடிக்கையாளர் பற்றிய தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டு விட்டதாகக் கூறி, இணைப்பைத் துண்டித்துள்ளனர். அழைப்பு துண்டிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே சீனிவாசன் வங்கிக்கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தான் எந்தவித OTPயும் தெரிவிக்கவில்லை எனவும்; வெறும் 10 ரூபாய் செலுத்துமாறு அவர்கள் லிங்க் அனுப்பியதாக போலீசாரிடம் புகாரில் தெரிவித்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு:இவ்வாறு ஆன்லைன் மோசடி செய்து நூதன முறையில் வருமான வரித்துறை உயர் அலுவலரின் வங்கிக் கணக்கிலேயே அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே பணத்தை இழந்த வருமானவரித்துறை தலைவர் சீனிவாசன், முன்னாள் மத்திய வருவாய்த்துறை செயலாளர் சிவராமனின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவராமன் மற்றும் சீனிவாசன் இருவரும் நேரடியாக மயிலாப்பூர் எஸ்பிஐ வங்கி கிளைக்குச்சென்று மேலாளரை அணுகியபோது, கொள்ளையடிக்கப்பட்ட பணம் கொல்கத்தா, சூரத், திருவண்ணாமலை ஆகியப்பகுதிகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வங்கி அலுவலர்கள் பதிலளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தவிர்க்க: எந்த வங்கியில் தங்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தாலும் சரி, வங்கியிலிருந்து யாரும் உங்களை ஒருபோதும் தொடர்புகொண்டு, உங்களைப் பற்றியும் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களையும், ஏடிஎம் கார்டு, அதன் நம்பர்கள் குறித்தும், அதன் கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) குறித்தும் கேட்பதற்கான அவசியம் என்பதே கிடையாது மறவாதீர்கள்.
மீறி அவ்வாறு யாரேனும் தொலைபேசியில் அழைத்து ஏதும் கேட்டால், நேரடியாக நாங்கள் வங்கியில் வந்து பேசுகிறோம் எனக் கூறி அழைப்பைத் துண்டித்து விடுங்கள். அத்துடன், பொதுமக்கள் தங்களின் தொலைபேசிக்கு வரும் லிங்க்-களை க்ளிக் செய்து திறந்து பார்ப்பதைத் தவிர்தது விடுங்கள்.
மேலும் இதுமாதிரியான மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக காவல் நிலையம் அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1930-ஐ தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இதையும் படிங்க: வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட பணத்தை மீட்ட சைபர் கிரைம் காவல் துறை!