சென்னை:தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக அடிக்கடி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் குற்றச் சம்பவங்கள், விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
இருந்தாலும் 2020ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 14 கொலைகள் அதிகமாக நடந்துள்ளதாக சென்னை காவல் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. 2020ஆம் ஆண்டு 147 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
சென்னையில் கடந்தாண்டு 161 கொலைகள்
ஆனால் கடந்தாண்டு (2021) 14 கொலைகள் அதிகமாகி 161 கொலைகள் நடந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அதில் 10 கொலைகள் பணம் - நகைக்காக நடந்துள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்தாண்டு 38 மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், 357 கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் சென்னை காவல் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்தாண்டு செல்போன், நகைப் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 907 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு 938 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் கடந்தாண்டு 31 வழக்குகள் குறைந்துள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்தாண்டு மட்டும் 435 போக்சோ வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை - 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது
அதுமட்டுமின்றி சென்னையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வதைத் தடுப்பதற்காகப் போதைப் பொருள்களை ஒழிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதனடிப்படையில் சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் 3104 குட்கா வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 48 ஆயிரத்து 206 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
665 கஞ்சா வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 2058 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. குட்கா, கஞ்சா விற்பனை செய்ததாக 27 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளதாகச் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திமுக வட்டச் செயலாளர் படுகொலை