சென்னை திருவான்மியூர் மார்க்கெட் பகுதியில் செயல்படும் கடைகளில் கரோனா விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவது குறித்தும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கரோனா இலவச தடுப்பூசி சிறப்பு முகாமையும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனாவின் இரண்டாவது அலை என்பது இதுவரை தாக்காமல் உள்ள பகுதிகளில் பரவுகிறது. அனைவரும் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சியில் தற்போதுவரை 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
சென்னையில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு நாளைக்கு 60 ஆயிரம் எட்டிவிட்டால் எளிதில் இலக்கை அடையலாம். அதற்கு இரண்டு அல்லது 3 மாத காலம் வரை ஆகலாம், அதுவரை அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
ஒரு தெருவில் மூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டாலே அதைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக்கி தூய்மைப்படுத்தும் பணிகள் எனப் பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. சென்னையில் உள்ள 30 ஆயிரம் தெருக்களில் 158 தெருக்களில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், "இது தேர்தல் நேரம் என்பதால் பரப்புரை என்பது அவசியமாகிறது. அரசியல் கட்சியினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கியிருக்கிறோம். முகக்கவசம் அணியாதவர்களிடம் தொடர்ந்து அபராதம் வசூலிக்கிறோம்.
அபராதம் வசூலிப்பது நோக்கமல்ல. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதே நோக்கம். வாக்கு சேகரிக்கும்போதும், பொதுகூட்டத்திலும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். வைரஸ் (தீநுண்மி) பரவும் வேகத்தைவிட தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வேகம் அதிகரித்தல் வேண்டும்" எனத் தெரிவித்தார்.