சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை வருகின்ற 20ஆம் தேதிக்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 18) நள்ளிரவு முதல் ஜூன் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. சென்னையில் மட்டும் கரோனாவின் தாக்கம் 35ஆயிரத்தை கடந்து தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு மக்கள் அதிக அளவில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், "2005ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தும் மையமாக அண்ணா பல்கலைக்கழகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகின்ற 20ஆம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருந்தால் அவர்களை வெளியேற்ற வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட மையமாக அண்ணா பல்கலைக்கழகம் செயல்படவுள்ளதால் அதற்கான செலவை சென்னை மாநகராட்சியே ஏற்கும்
கரோனா நிலைமை சீரான பிறகு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட அதே நிலையில் பல்கலைக்கழகம் திரும்ப ஒப்படைக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கூட்டம் கூட்டமாக சென்னையிலிருந்து வெளியேறும் மக்கள்!