கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதை அடுத்து இரண்டாம் கட்ட ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை மத்திய அரசு அறிவித்தது. இதனை அனைத்து மாநிலங்களும் கண்டிப்புடன் கடைபிடிக்கவும் அறிவுறித்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மே 3 வரை ஊரடங்கு தொடரும் என்பதால், பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வேலை இல்லாததால் வருமானமின்றி அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலை எளிய மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், தெருக்களில் சுற்றித்திரியும் நாய் போன்ற விலங்கினங்களையும் கூட நிலைகுலைய வைத்துள்ளது. சாதாரண நாட்களில் எங்காவது வீடுகளிலோ, கடை வாசல்களிலோ, குப்பை மேடுகளிலோ தங்கள் பசியாறி வந்த இந்த உயிரினங்கள் தற்போது ஊரடங்கால் உணவின்றி தெருக்களில் அலைந்து தவித்து வருகின்றன.