நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு, மூன்றாவது முறை ஊரடங்கை மே 17ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல், அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் அதி தீவிரமாக கரோனா பரவி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சில நிபந்தனைகளுடன் ஊரடங்கில் சிறியளவு தளர்வை அறிவித்துள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள் 50% அலுவலர்களைக் கொண்டு இயங்கலாம், பொதுப்பணித்துறைப் பணிகளைத் தொடங்கலாம், ஐடி நிறுவனங்களில் 10% பணியாளர்கள் பணியாற்றலாம் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி வேறு சில நிறுவனங்கள், கடைகளுக்கு அதற்கு தகுந்தாற்போல் நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, வேளச்சேரி 100 அடி சாலையில் பொதுப்பணித்துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தன. ஊரடங்கு அமலில் இருப்பதால் அப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேல்பாலப்பணியில் ஈடுபட்டுள்ளப் பணியாளர்கள், அந்த மேம்பாலத்திற்கு அடியிலேயே, தற்காலிகக் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.
'தளர்வுகள் அறிவித்தும் அரசு கட்டுமானத்தொழில் தொடங்கவில்லை' இந்நிலையில், அரசு நிபந்தனைகளுடன் சிறிய அளவு தளர்வு அறிவித்த நிலையில், பொதுப்பணித்துறையினர் இன்னும் அங்கு மேம்பாலப் பணிகளைத் தொடங்கவில்லை. இது தொடர்பாக அங்கு தங்கிருத்த வடமாநில மேம்பாலத் தொழிலாளர்களிடம் விசாரித்தபோது, "கரோனா வைரஸ் காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கே தான் பல நாட்களாக தங்கியுள்ளோம். எங்களுக்குப் பணிகள் தொடங்கலாம் என்று எந்தத் தகவலும் வரவில்லை " எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வாங்க சென்ற 11 பேருக்கு கரோனா!