அண்ணாநகர் எல் பிளாக் 1வது பிரதான சாலையில் வசித்து வருபவர் சத்திய நாராயணன். இவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்றிருந்தார். அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 100 சவரன் நகை, ரூ.1 லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கைக்கடிகாரம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் பணம் ஆகியவை கொள்ளையடித்து சென்றனர்.
சென்னையில் 100 சவரன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை! - கொள்ளை
சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் 100 சவரன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் லாக்கரை உடைக்க முயற்சித்த கொள்ளையர்கள் உடைக்க முடியாததால் வெளிநாட்டு மதுபான வகைகளையும் திருடி சென்றதோடு, வீட்டின் இணைய இணைப்பையும் துண்டித்து விட்டுச் சென்றுள்ளனர். அதேபகுதியில் உள்ள எல் பிளாக் 26வது தெருவில் முரளி கிருஷ்ணன் என்பவரது வீட்டிலும் புகுந்த மர்ம நபர்கள் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து கண்காணிப்பு கேமராக்களையும் கூடவே எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேபோல், எல் பிளாக் 21வது தெருவில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 5 லட்சம் பணத்தையும் டிவியையும் தூக்கிச் சென்றுள்ளனர். இந்த மூன்று சம்பவங்கள் குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஒரே பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.