சென்னை: சென்னை விமான நிலைய ஆலோசனைக் குழு ஆய்வுக் கூட்டம், டி.ஆர். பாலு எம்பி தலைமையில் இன்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் குறித்து, சென்னை விமான நிலையம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், "சென்னை விமான நிலைய ஆலோசனைக் குழு ஆய்வுக் கூட்டத்தில், சென்னை விமான நிலைய முனையங்கள், விமான ஓடுபாதை பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் விமானங்கள் தரையிறங்கும்போது எதிர்கொள்ளும் சிக்கல்கள், பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் நடந்துவருகின்றன. 1.7 கோடி பயணிகளிலிருந்து, 3.5 கோடி பயணிகளைக் கையாளுவதற்கான திறன் அதிகரிக்கப்படுகிறது. இதற்கு, முனையங்கள், விமான ஓடுபாதைகள் பகுதிகளிலும் பணி நடந்துவருகிறது.
ஆனால், அதற்கு கூடுதலான நிலம் தேவைப்படுகின்றது. அதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்கு, மாநில அளவில் வருவாய்த் துறை, ராணுவம், உள்ளாட்சி, இந்திய விமான நிலையங்கள் ஆணைய அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஓடுபாதையில் உள்ள தடைகளை அகற்றவும், பம்மல் பகுதியிலிருந்து வரும் அதிகமான கழிவு நீரால், விமான நிலையத்தில் உள்ள தரையிறங்குவதற்கு உதவும் கருவி அமைப்புகள் சேதமாகின்றன. இந்தக் கழிவு நீரை, விமான நிலையத்தின் வெளியே கவுல் பஜார் வழியாகத் திருப்பிவிடும் பணி நடந்துவருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'- சொந்த செலவில் வாய்க்காலைத் தூர்வாரும் 4 கிராம விவசாயிகள்