சென்னை: கே.கே. நகரை சேர்ந்த ரவி என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த காவலர் செந்தில் குமார், அவரது காதலி கவிதா ஆகியோர் அடியாட்களுடன் வந்து தாக்கி கடந்த 31 ஆம் தேதி இரவு கடத்திச் சென்றனர். கடத்தி செல்லப்பட்ட ரவியை இந்த கும்பல் செங்கல்பட்டில் வைத்து எரித்துக் கொலை செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக செந்தில்குமாரின் காதலி கவிதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே எரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ரவியின் மனைவி ஐஸ்வர்யா ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வர உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஐஸ்வர்யா, கடந்த சில நாட்களாவே பக்கத்து வீட்டில் குடியிருக்கும் காவலர் செந்தில் குமாரின் குடும்பத்திற்கும், தங்களது குடும்பத்துக்கும் இடையே சிறு தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், கடந்த 31 ஆம் தேதி இரவு தனது கணவர் ரவி வீட்டில் தனியாக இருந்தபோது காவலர் செந்தில்குமார், அவரது காதலி கவிதா, ஐசக், எட்வின் உட்பட 6 பேர் வீடு புகுந்து விசாரணைக்காக ரவியை தாக்கி கடத்தி சென்றதாக தெரிவித்தார். பின்னர் பல நாட்களாக தேடியும் தனது கணவர் கிடைக்காததால் கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், நடவடிக்கை எடுக்காததால் காவல் ஆணையரிடம் புகார் கொடுத்த உடன் கடந்த 3 ஆம் தேதி missing என வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.